உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை.
uRuppamain tURanjsA velpaTai vEntanveRukkaiyuL ellAm talai
E. Legasri Raja
பொருள் / உரை
முருகா எளிய உரை
படை உறுப்புகள் யாவும் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாமல் பகைவரை வெல்லும் ஆற்றல் வாய்ந்த படையே, ஓர் அரசுக்குரிய செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான தலைசிறந்த செல்வமாகும்.
• உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை = படைக்கல அமைப்புகள் நிறைந்து இன்னல்களுக்கு அஞ்சாத வீரப்படை,• வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை = அரசனுடைய செல்வங்கள் அனைத்திலும் முதன்மையான பெருஞ்செல்வமாகும்.
மு.வரதராசன்
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
பரிமேலழகர்
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை - யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை - அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம். (ஈண்டுப் படை என்றது, அந்நான்கன் தொகுதியை, ஊறு அஞ்சியவழி வேறல் கூடாமையின், 'ஊறு அஞ்சா' என்றும், ஒழிந்த அங்கங்கட்கும் அரசன் தனக்கும் காவலாகலின் 'வெறுக்கையுள் தலை' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.
Meaning in English
A conquering host, complete in all its limbs, that fears no wound, Mid treasures of the king is chiefest found





