குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை.
kunRERi yAnaippOr kaNTaRRAl tankaittonRuNTAkas seyvAn vinai
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் கையில் போதிய சொந்தப் பொருளை முதலீடாக வைத்துக் கொண்டு ஒரு செயலைச் செய்வது, பாதுகாப்பான ஒரு குன்றின் மீது நின்றுகொண்டு கீழே நடக்கும் யானைப் போரைப் பார்ப்பது போன்ற அச்சமற்ற செயலாகும்.
• தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை = தன் கைமுதல் கொண்டு ஒரு செயலைச் செய்வது,• குன்றேறி யானைப்போர் கண்டற்றால் = மலைமேல் நின்று பாதுகாப்பாக யானைச் சண்டையைப் பார்ப்பது போன்றதாகும்.
மு.வரதராசன்
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.
பரிமேலழகர்
தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை - தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று - ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும்.('கைத்து உண்டாக ஒன்று செய்வான்' எனக் கூட்டுக. 'ஒன்று'என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம்.குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம்.)
சாலமன் பாப்பையா
தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.
Meaning in English
As one to view the strife of elephants who takes his stand, On hill he's climbed, is he who works with money in his hand





