எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்நல்லாள் உடையது அரண்.
ellAp poruLum uTaittA yiTattutavumnallA LuTaiya taraN
M. Ravichander
பொருள் / உரை
முருகா எளிய உரை
உள்ளே இருப்பவர்களுக்குத் தேவையான உணவு, ஆயுதம் போன்ற அனைத்துப் பொருள்களையும் கொண்டு, போர் நெருக்கடி வரும் காலத்தில் நெஞ்சுரத்தோடு உயிர்காக்கும் சிறந்த வீரர்களைப் பெற்றிருப்பதே தலைசிறந்த அரணாகும்.
• எல்லாப் பொருளும் உடைத்தாய் = உள்ளிருப்போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கொண்டதாய்,• இடத்துதவும் நல்லாள் உடையது அரண் = நெருக்கடியான காலத்தில் உதவக்கூடிய சிறந்த வீரர்களைப் பெற்றிருப்பதே அரணாகும்.
மு.வரதராசன்
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.
பரிமேலழகர்
எல்லாப் பொருளும் உடைத்தாய் - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது. (அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.)
சாலமன் பாப்பையா
உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.
Meaning in English
A fort, with all munitions amply stored, In time of need should good reserves afford





