சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண்.
siRukAppiR pEriTatta tAki uRupakaiUkkam azhippa taraN
K. Dakshaa
பொருள் / உரை
முருகா எளிய உரை
குறைந்த வீரர்களைக் கொண்டு எளிதில் பாதுகாக்கத்தக்க வாயில்களையும், உள்ளே பரந்த இடப்பரப்பையும் கொண்டு, முற்றுகையிட வரும் பகைவர்களின் போர்த் துணிவையே அழிக்க வல்லதே சிறந்த கோட்டை அரணாகும்.
• சிறுகாப்பின் பேரிடத்ததாகி = காவல் காக்கும் இடம் சிறிதாய் உட்பகுதி பரந்த இடமாய் இருந்து,• உறுபகை ஊக்கமழிப்பது அரண் = வந்து தாக்கும் பகைவர்களின் மன உறுதியை அழிப்பதே அரணாகும்.
மு.வரதராசன்
காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.
பரிமேலழகர்
சிறுகாப்பின் பேர் இடத்தது ஆகி - காக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண் - தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது. (வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி 'சிறுகாப்பின்' என்றும்,அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது ஆகி' என்றும், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்' என்று வரும் பகைவர் வநது கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.
Meaning in English
A fort must need but slight defence, yet ample be, Defying all the foeman's energy





