தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு.
taLLA viLaiyuLum takkArum tAzhvilAsselvarunj sErvatu nATu
Shrikanth Kumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
வளம் குன்றாத விளைபொருள்களை உண்டாக்கும் உழவர்களும், அறநெறி தவறாத சான்றோர்களும், பிறருக்கு வாரி வழங்கித் தேய்வில்லாத நற்செல்வமுடையோரும் ஒருங்கே கூடி வாழ்வதே சிறந்த நாடாகும்.
• தள்ளா விளையுளும் = குன்றாத விளைபொருளைத் தரும் உழவர்களும்,• தக்காரும் = அறநெறி தவறாத சான்றோர்களும்,• தாழ்விலாச் செல்வரும் = தேய்வில்லா நற்செல்வம் உடையோரும்,• சேர்வது நாடு = ஒருங்கே கூடி வாழ்வதே சிறந்த நாடாகும்.
மு.வரதராசன்
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
பரிமேலழகர்
தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது: (மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.
Meaning in English
Where spreads fertility unfailing, where resides a band, Of virtuous men, and those of ample wealth, call that a 'land'





