Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 725

பொருட்பால்அங்கவியல்73. அவையஞ்சாமை

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு.

ARRin aLavaRintu kaRka avaiyanjsAmARRang koTuttaR poruTTu

திருக்குறள் / THIRUKKURAL

பொருள் / உரை

முருகா எளிய உரை

சான்றோர்கள் நிறைந்த அவையில் விவாதங்களுக்கு அஞ்சாமல் தக்க மறுமொழி கூறி வெற்றி பெறுவதற்காக, இலக்கண நெறியோடு தர்க்க சாத்திரமாகிய அளவை நூல்களை முறைப்படி ஆழ்ந்து கற்க வேண்டும்.

• அவையஞ்சா மாற்றங்கொடுத்தற் பொருட்டு = அவையில் அஞ்சாமல் தக்க விடை அளிக்கும் பொருட்டு,• ஆற்றின் அளவறிந்து கற்க = இலக்கண நெறியோடு தர்க்க அளவை நூல்களை முறைப்படி கற்க வேண்டும்.

மு.வரதராசன்

அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

பரிமேலழகர்

ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. (அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.

Meaning in English

By rule, to dialectic art your mind apply, That in the council fearless you may make an apt reply

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout