கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல்.
kaRRArmun kaRRa selassollit tAngkaRRamikkAruL mikka koLal
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• கற்றார்முன் கற்ற செலச்சொல்லி = சான்றோர் முன் தாம் கற்றவற்றை அவர் மனம் ஏற்க உரைத்து,• தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல் = தம்மைவிட அதிகம் கற்றவரிடம் மேலான அறிவைப் பெற வேண்டும்.எளிய விளக்கம்:கற்றறிந்த சான்றோர்களின் அவையில் தாம் கற்றவற்றை அவர்கள் உள்ளம் ஏற்குமாறு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்; அதே நேரத்தில், தம்மை விட மிகுதியாகக் கற்றவர்களிடமிருந்து மேலான புதிய அறிவைப் பணிவோடு கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மு.வரதராசன்
கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
கற்றார்முன் கற்ற செலச்சொல்லிச் - பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல் - அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்துகொள்க (எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின், வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக, சொல்லவே, அவரும்அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்கப்பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. இதனால் அவனது ஒருசார்பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.
Meaning in English
What you have learned, in penetrating words speak out before The learn'd; but learn what men more learn'd can teach you more





