புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்குசலச் சொல்லு வார்.
pullavaiyuL possAntum sollaRka nallavaiyuLnanku selassollu vAr
Karka Trust
பொருள் / உரை
முருகா எளிய உரை
சான்றோர்கள் நிறைந்த நல்லவையில் உயர்ந்த கருத்துகளை அவர்கள் உள்ளத்தில் பதியுமாறு பேசும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற கீழ்மக்கள் கூடியுள்ள அவையிலே மறந்தும் கூட அத்தகைய கருத்துகளைப் பேசக் கூடாது.
• நல்லவையுள் நன்கு செலச்சொல்லுவார் = சான்றோர் அவையில் கருத்துகளைப் பதிய வைக்கும் வல்லமையுடையோர்,• புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க = அறிவற்ற கீழ்மக்கள் அவையில் மறந்தும் நல்லவற்றைப் பேசக் கூடாது.
மு.வரதராசன்
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.
பரிமேலழகர்
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக. (சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.)
சாலமன் பாப்பையா
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.
Meaning in English
In councils of the good, who speak good things with penetrating power, In councils of the mean, let them say nought, e'en in oblivious hour





