உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
uNarva tuTaiyArmun sollal vaLarvatanpAttiyuL nIrsorin taRRu
திருக்குறள் / THIRUKKURAL
பொருள் / உரை
முருகா எளிய உரை
கருத்துகளைத் தாமே சுயமாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்களின் முன்னிலையில் நல்லவற்றைப் பேசுவது, செழித்து வளரும் பயிர்கள் உள்ள பாத்தியில் நீரைப் பாய்ச்சுவது போல மிகுந்த நற்பயனைத் தரும்.
• உணர்வது உடையார்முன் சொல்லல் = தாமே உணரும் நுண்ணறிவாளர்கள் முன் பேசுவது,• வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்தற்று = செழித்து வளரும் பயிர் பாத்தியில் நீரைப் பாய்ச்சுவதைப் போன்றதாகும்.
மு.வரதராசன்
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
பரிமேலழகர்
உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினை உடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று - தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும். (தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.
Meaning in English
To speak where understanding hearers you obtain, Is sprinkling water on the fields of growing grain





