நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு.
nanRen RavaRRuLLum nanRE mutuvaruLmuntu kiLavAs seRivu
Sughandhisri Krishnamoorthi
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோர்கள் கூடியுள்ள அவையில், அவர்களுக்கு முன்பாக முந்திக்கொண்டு பேசாமல் அடக்கமாக இருக்கும் பண்பானது, மனிதனுக்கு நன்மை என்று போற்றப்படும் எல்லாவற்றிலும் தலையாய நன்மையாகும்.
• முதுவருள் முந்து கிளவாச் செறிவு = அறிவு முதிர்ந்த பெரியோரின் முன் முந்திக்கொண்டு பேசாத அடக்கம்,• நன்றென்ற வற்றுள்ளும் நன்றே = நற்பண்புகள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்த நன்மையாகும்.
மு.வரதராசன்
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.
பரிமேலழகர்
நன்று என்றவற்றுள்ளும் நன்றே - ஒருவற்கு இது நன்று என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நன்றே; முதுவருள் முந்து கிளவாச் செறிவு - தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். (தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளர்ந்தாற் படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும் அறிந்தே அடங்கினமையின், அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்றார்.முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும்ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண்செய்யும் திறம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.
Meaning in English
Midst all good things the best is modest grace, That speaks not first before the elders' face





