மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல்.
makan tantaik kARRum utavi ivantantaiennORRAn kollenum sol
SPR Prime Media
பொருள் / உரை
முருகா எளிய உரை
'என்ன தவமோ செய்தாரோ' எனும் சொல்லே!உலகத்தோர் வியந்து போற்றிடும் சொல்லே!மகன்தந்தைக்குக் கைம்மாறாகச் சேருமே!மகனின் புகழால் தந்தைக்கே சேருமே!
• மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி = ஒரு மகன் தன் தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறானது,• இவன் தந்தை = 'இவனது தந்தையானவர்• என் நோற்றான் கொல் = என்ன பெரும் தவம் செய்தாரோ!'• எனும் சொல் = என்று உலகத்தார் வியந்து போற்றும் நற்சொல்லைப் பெற்றுத் தருவதேயாகும்.
மு.வரதராசன்
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
பரிமேலழகர்
தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல். ('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது)
சாலமன் பாப்பையா
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.
Meaning in English
To sire, what best requital can by grateful child be done? To make men say, 'What merit gained the father such a son?'





