Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 693

பொருட்பால்அங்கவியல்70. மன்னரைச் சேர்ந்தொழுதல்

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்தேற்றுதல் யார்க்கும் அரிது.

pORRin ariyavai pORRal kaTuttapintERRutal yArkkum aritu

Asha De Sojanar

பொருள் / உரை

முருகா எளிய உரை

மன்னரைச் சார்ந்து வாழ்பவர்கள் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், மன்னிக்க முடியாத கொடிய தவறுகள் தம்மிடம் நேர்ந்துவிடாமல் காத்துக் கொள்ள வேண்டும்; மன்னர் ஒருமுறை சந்தேகம் கொண்டுவிட்டால், அவரைத் தெளிவிப்பது எவருக்கும் முடியாத செயலாகும்.

• போற்றின் அரியவை போற்றல் = தம்மைக் காக்க விரும்பினால் கொடிய குற்றங்கள் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்;• கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது = மன்னர் சந்தேகம் கொண்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவருக்கும் அரிதாகும்.

மு.வரதராசன்

.( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.

பரிமேலழகர்

போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான். (அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வௌவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.

Meaning in English

Who would walk warily, let him of greater faults beware; To clear suspicions once aroused is an achievement rare

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout