Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 691

பொருட்பால்அங்கவியல்70. மன்னரைச் சேர்ந்தொழுதல்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

akalA taNukAtu tIkkAyvAr pOlkaikalvEntars sErntozhuku vAr

Vidhya Chinnaswamy

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஆட்சியாளர்களைச் சார்ந்து வாழ்கின்றவர்கள், குளிர் காய்வதற்காகத் தீயின் அருகில் நிற்பவர்களைப் போல, மிகத் தொலைவில் விலகிவிடாமலும் அளவுக்கு மீறி நெருங்கிவிடாமலும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்துப் பழக வேண்டும்.

• இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் = ஆட்சியாளர்களைச் சார்ந்து வாழ்பவர்கள்,• அகலாது அணுகாது தீக்காய்வார்போல்க = நெருப்பில் குளிர்காய்வது போல விலகாமலும் மிக நெருங்காமலும் இடைநிலை நின்று பழக வேண்டும்.

மு.வரதராசன்

அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.

பரிமேலழகர்

இகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார் - மாறுபடுதலையுடைய அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல்வேந்தர்' என்றார், மிக அகலின் பயன் கொடாது, மிகஅணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.

Meaning in English

Who warm them at the fire draw not too near, nor keep too much aloof; Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout