இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குஉறுதி பயப்பதாம் தூது.
iRuti payappinum enjsA tiRaivaRkuRuti payappatAm tUtu
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் உயிருக்கே மரணம் நேரிடுவதாக இருந்தாலும், அதற்கு அஞ்சாமல் கடமையைச் செய்து, தன் நாட்டின் தலைவனுக்கு நன்மையையும் வெற்றியையும் தேடித்தருபவனே உண்மையான தூதனாவான்.
• இறுதி பயப்பினும் எஞ்சாது = உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சிப் பின்வாங்காமல்,• இறைவற்கு உறுதி பயப்பதாந் தூது = நாட்டு மன்னனுக்கு நன்மையையும் வெற்றியையும் தேடித்தருபவனே தூதனாவான்.
மு.வரதராசன்
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
பரிமேலழகர்
இறுதி பயப்பினும் எஞ்சாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான். ('இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.
Meaning in English
Death to the faithful one his embassy may bring; To envoy gains assured advantage for his king





