Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 685

பொருட்பால்அங்கவியல்69. தூது

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதாந் தூது.

tokassollit tUvAta nIkki nakassollinanRi payappatAn tUtu

M. Ananyah

பொருள் / உரை

முருகா எளிய உரை

செய்திகளைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறியும், கோபம் மூட்டும் கடுமையான சொற்களைத் தவிர்த்தும், கேட்பவர் மனம் மகிழுமாறு பேசித் தன் நாட்டுக்கு நன்மையைத் தேடித்தருபவனே தலைசிறந்த தூதனாவான்.

• தொகச்சொல்லித் தூவாத நீக்கி = சுருக்கமாகத் தொகுத்துக் கூறி, கசப்பான சொற்களை நீக்கி,• நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது = மனம் மகிழுமாறு பேசி நாட்டுக்கு நன்மை தேடித்தருபவனே தூதனாவான்.

மு.வரதராசன்

பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

பரிமேலழகர்

தொகச் சொல்லி - வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச் சொல்லி - இன்னாத காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதுஆம் - தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான். (பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர், இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, அவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.)

சாலமன் பாப்பையா

அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.

Meaning in English

In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word, An envoy he who gains advantage for his lord

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout