அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு.
aRivuru vArAynta kalviyim mUnRanseRivuTaiyAn selka vinaikku
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
இயற்கையான நுண்ணறிவு, காண்பவர் விரும்பும் தோற்றப் பொலிவு, நன்கு ஆராய்ந்த ஆழ்ந்த கல்வி ஆகிய மூன்று சிறப்புகளும் நிறைந்திருப்பவனே நாட்டின் தூதுப் பணிக்குச் செல்ல வேண்டும்.
• அறிவு உரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றன் செறிவுடையான் = இயற்கை அறிவு, தோற்றப் பொலிவு, ஆழ்ந்த கல்வி ஆகிய மூன்றையும் உடையவனே,• வினைக்குச் செல்க = நாட்டின் தூதுப் பணிக்குச் செல்லத் தகுதியானவன்.
மு.வரதராசன்
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.
பரிமேலழகர்
அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க.(இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்'என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.
Meaning in English
Sense, goodly grace, and knowledge exquisite Who hath these three for envoy's task is fit





