உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து.
uRaisiRiyAr uNNaTungkal anjsik kuRaipeRiRkoLvar periyArp paNintu
Haripriya
பொருள் / உரை
முருகா எளிய உரை
சிறிய நாட்டை ஆளும் மெலிய ஆட்சியாளர்கள், வலிய பகைவரின் படையெடுப்பால் தம் நாட்டு மக்கள் நடுங்குவதைத் தவிர்க்க, அமைதி உடன்படிக்கை கிடைத்தால் வலியோரைப் பணிந்து ஏற்றுக் கொள்வார்கள்.
• உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சி = சிறிய நாட்டை ஆள்வோர் தம் மக்கள் அஞ்சுவதைக் கண்டு,• குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வர் = அமைதி உடன்படிக்கை கிடைத்தால் வலியோரைப் பணிந்து ஏற்பர்.
மு.வரதராசன்
வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.
பரிமேலழகர்
உறை சிறியார் - ஆளும் இடஞ் சிறியராய அமைச்சர்; உள்நடுங்கல் அஞ்சி -தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம்பகுதி நடுங்கலை அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார் - அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர். (இடம்: நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேல் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது வாராமல் சிறிதுகொடுத்தும் சந்தியை ஏற்றுக்கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின் , 'கொள்வர்' என உலகியலால் கூறினார், இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.
Meaning in English
The men of lesser realm, fearing the people's inward dread, Accepting granted terms, to mightier ruler bow the head





