Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 678

பொருட்பால்அங்கவியல்68. வினைசெயல்வகை

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று.

vinaiyAn vinaiyAkkik kOTal nanaikavuLyAnaiyAl yAnaiyAt taRRu

Priyanka Vaideeswaran

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு காரியத்தைச் செய்யும் போதே அதே முயற்சியைப் பயன்படுத்தி மற்றொரு காரியத்தையும் ஒருங்கே முடித்துக் கொள்வது என்பது, பழக்கப்பட்ட ஒரு யானையைக் கொண்டு மற்றொரு காட்டு யானையைப் பிடிப்பதைப் போன்ற செயல் உத்தியாகும்.

• வினையான் வினையாக்கிக் கோடல் = ஒரு செயலால் மற்றொரு செயலையும் ஒருங்கே முடித்துக் கொள்வது,• நனைகவுள் யானையால் யானையாத்தற்று = ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பது போலாம்.

மு.வரதராசன்

ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

பரிமேலழகர்

வினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக்கொள்க; நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிதுமோர் யானையைப் பிணித்ததனோடு ஒக்கும். (பிணித்தற்கு அருமைதோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே. அம் முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.

Meaning in English

By one thing done you reach a second work's accomplishment; So furious elephant to snare its fellow brute is sent

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout