முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.
muTivum iTaiyURum muRRiyAng keytumpaTupayanum pArttus seyal
Anusha Ravi
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு காரியத்தை முடிப்பதற்கான உழைப்பு, வழியில் வரக்கூடிய இடையூறுகள், செயல் முடிந்த பின் கிடைக்கக்கூடிய பெரும்பயன் ஆகியவற்றை நன்கு சீர்தூக்கி ஆராய்ந்த பின்னரே அச்செயலைச் செய்ய வேண்டும்.
• முடிவும் இடையூறும் = செயலை முடிக்கும் உழைப்பையும் வரக்கூடிய தடைகளையும்,• முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் = முடிந்த பின் கிடைக்கும் பெரும்பயனையும் சீர்தூக்கிச் செய்ய வேண்டும்.
மு.வரதராசன்
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
பரிமேலழகர்
முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர்தூக்கிச் செய்க. (முடிவு, ஆகுபெயர், 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரிதாயின் செய்க' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.
Meaning in English
Accomplishment, the hindrances, large profits won By effort these compare,- then let the work be done





