பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல்.
poruLkaruvi kAlam vinaiyiTano TaintumiruLtIra eNNis seyal
Ganesh Kumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு காரியத்தைச் செய்வதற்குத் தேவையான செல்வம், தகுந்த கருவிகள், ஏற்ற காலம், சரியான செயல்முறை, பொருத்தமான இடம் ஆகிய ஐந்து கூறுகளையும் சந்தேகமறத் தெளிவாக ஆராய்ந்து செய்ய வேண்டும்.
• பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் = தேவையான செல்வம், கருவிகள், காலம், செயல்முறை, இடம் ஆகிய ஐந்தையும்,• இருள்தீர எண்ணிச் செயல் = சந்தேகமறத் தெளிவாக ஆராய்ந்து செய்ய வேண்டும்.
மு.வரதராசன்
வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
பரிமேலழகர்
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க. (எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும். கருவி-தன்தானையும் மாற்றார் தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்ல வினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.
Meaning in English
Treasure and instrument and time and deed and place of act These five, till every doubt remove, think o'er with care exact





