தந்தை மகற்காற்று நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்.
tantai makaRkARRum nanRi avaiyattumunti iruppas seyal
Tamil Kadhalan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மகற்குத் தந்தை புரியும் தலைநன்றி!கல்வியில் சிறந்தோன் ஆக்குதலே நன்றி!கற்றோர் அவையினில் முதன்மை ஆவானே!யாவரையும் விட முதன்மை ஆவானே!
• தந்தை = ஒரு தந்தை• மகற்கு ஆற்றும் நன்றி = தன் மகனுக்குச் செய்ய வேண்டிய தலையாய நன்மையாவது,• அவையத்து = கற்றறிந்த சான்றோர்கள் கூடும் சபையில்• முந்தி இருப்பச் செயல் = தன் மகன் எல்லாரையும் விட முதன்மையாக வீற்றிருக்கும்படி அவனைக் கல்வியில் சிறந்தவனாக்குவதே ஆகும்.
மு.வரதராசன்
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
பரிமேலழகர்
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
Meaning in English
Sire greatest boon on son confers, who makes him meet, In councils of the wise to fill the highest seat





