உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து.
uruvukaN TeLLAmai vENTum uruLperuntErkkassANi yannAr uTaittu
Gana Bala
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவரது தோற்றச் சிறுமையைக் கண்டு அவரை இகழக்கூடாது; ஓடுகின்ற மாபெரும் தேரினைத் தாங்கி இயக்கும் சிறிய அச்சாணியைப் போல, உருவத்தால் சிறியவராக இருந்தாலும் அளப்பரிய செயல் உறுதியுடைய பெருமக்கள் உலகில் உண்டு.
• உருவுகண்டு எள்ளாமை வேண்டும் = தோற்றச் சிறுமையைக் கண்டு எவரையும் இகழக்கூடாது;• உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து = பெரிய தேரைத் தாங்கும் அச்சாணி போன்ற ஆற்றலாளர்கள் உலகில் உள்ளனர்.
மு.வரதராசன்
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.
பரிமேலழகர்
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக. (சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.
Meaning in English
Despise not men of modest bearing; Look not at form, but what men are: For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car





