கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும்.
kaTinta kaTintorAr seytArk kavaitAmmuTintAlum pIzhai tarum
Shreya Satish
பொருள் / உரை
முருகா எளிய உரை
சான்றோர்களால் தகாதவை என விலக்கப்பட்ட தீய செயல்களை விலக்காமல் துணிந்து செய்தவர்களுக்கு, அச்செயல்கள் தற்காலிகமாக நிறைவேறினாலும் முடிவில் பெருந்துன்பத்தையே கொண்டுவந்து தரும்.
• கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு = சான்றோர் விலக்கிய தீய செயல்களை விலக்காமல் செய்தவர்க்கு,• அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் = அச்செயல் வெற்றிகரமாக முடிந்தாலும் பெருந்துன்பத்தையே தரும்.
மு.வரதராசன்
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.
பரிமேலழகர்
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும். (முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.)
சாலமன் பாப்பையா
வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.
Meaning in English
To those who hate reproof and do forbidden thing What prospers now, in after days shall anguish bring





