சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
solluka sollaip piRitOrsol assollaivellunjsol inmai aRintu
Vishnu Badrinath
பொருள் / உரை
முருகா எளிய உரை
தாம் சொல்லக் கருதிய கருத்தை மறுத்து வெல்லக்கூடிய வேறொரு மாற்றுச் சொல் இல்லை என்பதை முன்கூட்டியே தெளிவாக ஆராய்ந்து உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லை அவையில் எடுத்துப் பேச வேண்டும்.
• பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து = தாம் சொல்லும் கருத்தை வெல்லும் வேறொரு சொல் இல்லை என்பதை உணர்ந்து,• சொல்லுக சொல்லை = அந்தச் சொல்லை அவையில் துணிவுடன் பேச வேண்டும்.
மு.வரதராசன்
வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.
பரிமேலழகர்
சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக. (பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச்சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல், அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல்', 'வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.)
சாலமன் பாப்பையா
தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.
Meaning in English
Speak out your speech, when once 'tis past dispute That none can utter speech that shall your speech refute





