Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 637

பொருட்பால்அங்கவியல்64. அமைச்சு

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல்.

seyaRkai aRintak kaTaittu mulakattiyaRkai aRintu seyal

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

நூல்களின் வழியே காரியங்களைச் செய்யும் நுட்பங்களை அறிந்திருந்த போதிலும், மக்களின் இயல்பையும் உலக நடைமுறையையும் உணர்ந்து அதற்கேற்பப் பொருந்துமாறு செய்ய வேண்டும்.

• செயற்கை அறிந்தக்கடைத்தும் = நூலறிவால் வழிமுறைகளை முழுமையாக அறிந்திருந்தாலும்,• உலகத்து இயற்கை அறிந்து செயல் = உலக நடைமுறையையும் மக்களின் இயல்பையும் அறிந்து அதற்கேற்பச் செய்ய வேண்டும்.

மு.வரதராசன்

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

பரிமேலழகர்

செயற்கை அறிந்தக்கடைத்தும் - நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க. (கடைத்தும் என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி. 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க, செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.

Meaning in English

Though knowing all that books can teach, 'tis truest tact To follow common sense of men in act

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout