பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு.
pirittalum pENik koLalum pirintArpporuttalum valla tamaissu
Dr. Sai Sankar Ganesan
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• பிரித்தலும் = பகைவர்களின் கூட்டாளிகளைப் பிரிப்பதிலும்,• பேணிக்கொளலும் = தம் நண்பர்களைப் பிரியாமல் காப்பதிலும்,• பிரிந்தார்ப் பொருத்தலும் = பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பதிலும்,• வல்லதமைச்சு = வல்லமை கொண்டவனே சிறந்த அமைச்சன்.எளிய விளக்கம்:பகைவர்களின் துணையாக இருப்பவர்களைப் பிரித்தல், தம்மிடம் உள்ள நல்லவர்களைப் பிரியாமல் பாதுகாத்தல், பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல் ஆகிய ராஜதந்திரங்களில் வல்லவனே சிறந்த அமைச்சனாவான்.
மு.வரதராசன்
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
பரிமேலழகர்
பிரித்தலும் - வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (இவற்றுள் அப்பொழுதை நிலைக்கு ஏற்ற செயலறிதலும், அதனை அவர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி' என்றும் பிரித்தலை 'விக்கிரகம்' என்றும் கூறுப.)
சாலமன் பாப்பையா
நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.
Meaning in English
A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide





