Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 625

பொருட்பால்அரசியல்63. இடுக்கணழியாமை

அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.

aTukki varinum azhivilAn uRRaiTukkaN iTukkaT paTum

Vasundhara

பொருள் / உரை

முருகா எளிய உரை

துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து அடுக்கடுக்காக வந்தாலும் கூட, மனம் தளராமல் உறுதியோடு நிற்கும் மனிதனைத் தாக்கிய துன்பங்களே தாமே துன்பப்பட்டுத் தோற்று அழியும்.

• அடுக்கி வரினும் = துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும்,• அழிவிலான் உற்ற இடுக்கண் = மனம் தளராதவனைத் தாக்கிய துன்பங்கள்,• இடுக்கட்படும் = அவனது மன உறுதியைக் கண்டு தாமே துன்பப்பட்டு அழியும்.

மு.வரதராசன்

விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

பரிமேலழகர்

அடுக்கி வரினும் - இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் - தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.

Meaning in English

When griefs press on, but fail to crush the patient heart, Then griefs defeated, put to grief, depart

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout