ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.
Uzhaiyum uppakkang kANpar ulaivinRittAzhA tunjaRRu pavar
Rita Thyagarajan
பொருள் / உரை
முருகா எளிய உரை
இடையூறுகள் நேர்ந்தாலும் மனம் தளராமல் இடைவிடாது சுறுசுறுப்புடன் முயற்சி செய்பவர்கள், தமக்கு எதிராக வரும் கொடிய விதியையும் புறமுதுகு காட்டித் தோற்று ஓடச் செய்வார்கள்.
• உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் = மனம் தளராமல் காலந்தாழ்த்தாது இடைவிடாது முயற்சி செய்பவர்,• ஊழையும் உப்பக்கம் காண்பர் = தமக்கு எதிராக வரும் விதியையும் புறமுதுகிட்டு ஓடச் செய்வர்.
மு.வரதராசன்
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.
பரிமேலழகர்
ஊழையும் உப்பக்கம் காண்பர் - பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்காண்பர்; உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் - அவ்விலக்கிற்கு இளையாது வினையைத் தாழ்வற முயல்வார்.(தாழ்வறுதல் - சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல். ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின் , பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார்.தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.
Meaning in English
Who strive with undismayed, unfaltering mind, At length shall leave opposing fate behind





