பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.
poRiyinmai yArkkum pazhiyan RaRivaRintALvinai inmai pazhi
Indu Sreenath
பொருள் / உரை
முருகா எளிய உரை
சாதகமான விதியோ உடலுறுப்புக் குறைபாடோ இருப்பது எவருக்கும் பழிக்குரிய குற்றம் ஆகாது; ஆனால் அறிய வேண்டியவற்றை அறிந்து விடாமுயற்சியோடு உழைக்காமல் சோம்பி இருப்பதே மிகப்பெரிய பழியாகும்.
• பொறியின்மை யார்க்கும் பழியன்று = சாதகமான விதியோ உறுப்புக் குறைபாடோ இருப்பது எவருக்கும் பழியாகாது;• அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி = அறிய வேண்டியவற்றை அறிந்து விடாமுயற்சி செய்யாமல் இருப்பதே பழியாகும்.
மு.வரதராசன்
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
பரிமேலழகர்
பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.)
சாலமன் பாப்பையா
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
Meaning in English
'Tis no reproach unpropitious fate should ban; But not to do man's work is foul disgrace to man





