பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற.
peRumavaRRuL yAmaRiva tillai aRivaRintamakkaTpE Ralla piRa
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• பெறுமவற்றுள் = ஒரு மனிதன் பெறக்கூடிய எல்லாப் பேறுகளுள்ளும்• அறிவு அறிந்த = அறிய வேண்டிய நல் அறிவை உணர்ந்த• மக்கட்பேறு அல்ல பிற = நல்ல பிள்ளைகளைப் பெறுவதைத் தவிர வேறு எந்தப் பேற்றையும்• யாம் அறிவது இல்லை = மேலானதாக நாம் கருதுவது இல்லை.எளிய விளக்கம்:ஒரு மனிதன் தன் வாழ்வில் அடையக்கூடிய எல்லா நன்மைகளிலும், அறிய வேண்டிய நல்லறிவை உணர்ந்த சிறந்த நற்பிள்ளைகளைப் பெறுவதைத் தவிர, மேலான பெரும் பாக்கியம் வேறு எதுவுமே இல்லை.
மு.வரதராசன்
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
பரிமேலழகர்
பெறுமவற்றுள் - ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை - யாம் மதிப்பது இல்லை. ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.
Meaning in English
Of all that men acquire, we know not any greater gain, Than that which by the birth of learned children men obtain





