Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 60

அறத்துப்பால்இல்லறவியல்6. வாழ்க்கைத் துணைநலம்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்நன்கலம் நன்மக்கட் பேறு.

mangkalam enpa manaimATsi maRRatannankalam nanmakkaT pERu

SPR Prime Media

பொருள் / உரை

முருகா எளிய உரை

மனைவி நற்குணமே மங்கலமாகும்!குடும்ப வாழ்விற்கு அது சிறப்பாகும்!நன்மக்கள் பலரையும் பெறுவதாகும்!அந்த வாழ்விற்கு நல்அணிகலனாகும்!

• மனை மாட்சி = மனைவியின் சிறந்த நற்குண நற்செயல்களே• மங்கலம் என்ப = குடும்ப வாழ்க்கைக்கு மங்கலமான நன்மை என்று அறிஞர் கூறுவர்;• மற்று அதன் = அந்த வாழ்க்கைக்கு மேலும் அழகு சேர்க்கும்• நன்கலம் = மிகச் சிறந்த அணிகலனாவது• நன்மக்கட் பேறு = நல்லொழுக்கமுடைய நற்பிள்ளைகளைப் பெறுவதேயாகும்.

மு.வரதராசன்

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

பரிமேலழகர்

மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.

Meaning in English

The house's 'blessing', men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout