Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 602

பொருட்பால்அரசியல்61. மடியின்மை

மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர்.

maTiyai maTiyA ozhukal kuTiyaikkuTiyAka vENTu pavar

Shehnaz

பொருள் / உரை

முருகா எளிய உரை

தாம் பிறந்த குடும்பத்தைப் புகழும் பெருமையும் மிக்க சிறந்த குடும்பமாக உயர்த்த விரும்புகின்றவர்கள், சோம்பலைக் கொடிய நஞ்சாகக் கருதி ஒழித்துவிட்டு, விடாமுயற்சியோடு உழைத்து வாழ வேண்டும்.

• குடியைக் குடியாக வேண்டுபவர் = தான் பிறந்த குடும்பத்தைச் சிறந்த நற்குடும்பமாக உயர்த்த விரும்புபவர்,• மடியை மடியா ஒழுகல் = சோம்பலைக் கொடிய பகையாகக் கருதி ஒழித்து முயற்சியோடு செயல்பட வேண்டும்.

மு.வரதராசன்

தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

பரிமேலழகர்

குடியைக் குடியாக வேண்டுபவர் - தாம் பிறந்த குடியை மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல் - மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக. ('முயற்சியோடு' என்பது அவாய் நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம் உயர்வர்; உயரவே குடி உயரும் என்பார், குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.

Meaning in English

Let indolence, the death of effort, die, If you'd uphold your household's dignity

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout