குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும்.
kuTiyennung kunRA viLakkam maTiyennummAsUra mAyntu keTum
V. M. Karthik Kumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவன் பிறந்த குடும்பத்தின் பெருமை என்கின்ற அணையாத விளக்கானது, அவனிடம் சோம்பல் என்கின்ற கரிய அழுக்கு படியப் படிய, தன் ஒளியை இழந்து முற்றிலும் அணைந்து அழிந்து போய்விடும்.
• குடியென்னும் குன்றா விளக்கம் = பிறந்த குடும்பத்தின் பெருமை என்னும் நந்தா விளக்கானது,• மடியென்னும் மாசு ஊர = சோம்பல் என்னும் அழுக்கு படியப் படிய,• மாய்ந்து கெடும் = ஒளி மங்கி முற்றிலும் அழிந்து போகும்.
மு.வரதராசன்
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.
பரிமேலழகர்
குடி என்னும் குன்றா விளக்கம் - தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு; மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் - ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப்போம். (உலக நடை உள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா விளக்கம்' என்றும், தாமத குணத்தான் வருதலின், 'மடியை' மாசு என்றும், அஃது ஏனையிருள் போலாது அவ் விளக்கத்தைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலி உடைமையின் 'மாசு ஊர மாய்ந்து கெடும்' என்றும் கூறினார். கெடுதல் - பெயர் வழக்கமும் இல்லையாதல்.
சாலமன் பாப்பையா
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.
Meaning in English
Of household dignity the lustre beaming bright, Flickers and dies when sluggish foulness dims its light





