பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார்.
poRivAyil aintavittAn poytIr ozhukkaneRininRAr nITuvAzh vAr
திருக்குறள் 6: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஐம்புலன் ஆசை அறுத்த இறைவன் நெறியில்!பொய் சிறிதும் இல்லாத நல்லொழுக்க நெறியில்!அதில் நிலைத்து நிற்பவர் நீண்ட காலம் வாழ்வார்!என்றென்றும் நிலையான நல்வாழ்வு பெற்று வாழ்வார்!
• பொறி வாயில் ஐந்து அவித்தான் = மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழியே எழும் ஆசைகளை அறுத்த இறைவனுடைய,• பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் = பொய்யற்ற மெய்யான அறநெறியில் நிலைத்து நிற்பவர்கள்,• நீடு வாழ்வார் = பிறவித்துன்பம் இன்றி அழியாத முக்தி நிலையைப் பெற்று எக்காலத்தும் நிலைத்து வாழ்வார்கள்.
மு.வரதராசன்
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்
பரிமேலழகர்
பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)
சாலமன் பாப்பையா
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்
Meaning in English
Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'





