ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும்.
oRRoR RuNarAmai yALka uTanmUvarsoRRokka tERap paTum
Gayathri Parabrahmadas
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒற்றர்களை இயக்கும் போது ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதவாறு தனித்தனியாக இயக்க வேண்டும்; அவ்வாறு அனுப்பப்பட்ட மூன்று வெவ்வேறு ஒற்றர்களின் செய்திகளும் ஒன்றுபோல ஒத்துப் போனால் மட்டுமே அது உண்மையான செய்தி என்று ஏற்க வேண்டும்.
• ஒற்றொற்று உணராமை ஆள்க = ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி தனித்தனியாக இயக்க வேண்டும்;• உடன்மூவர் சொற்றொக்க = அனுப்பப்பட்ட மூன்று ஒற்றர்களின் சொல்லும் ஒத்துப் போனால்,• தேறப்படும் = அதுவே உண்மையான செய்தி என்று நம்பித் தெளியப்படும்.
மு.வரதராசன்
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.
பரிமேலழகர்
ஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஒற்றாரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் - அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும். ('ஆயின்' என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக்கூறுவர் ஆகலின், 'உணராமை ஆள்க' என்றும், மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப் படுதலும், பட்டால் நீடு நிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும் கூறினார்.இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம்பெற்றாம்.)
சாலமன் பாப்பையா
ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.
Meaning in English
One spy must not another see: contrive it so; And things by three confirmed as truth you know





