மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று.
maRaintavai kETkavaR RAki aRintavaiaiyappA TillatE oRRu
Gitanjali Jayaraman
பொருள் / உரை
முருகா எளிய உரை
மறைக்கப்பட்ட இரகசியங்களையும் சாதுரியமாகக் கேட்டறியும் வல்லமை பெற்று, தான் அறிந்த செய்திகளில் எவ்வித சந்தேகமும் குழப்பமும் இன்றித் தெளிவாக உறுதி செய்பவனே சிறந்த ஒற்றன் ஆவான்.
• மறைந்தவை கேட்கவற்று ஆகி = மறைத்து வைக்கப்பட்ட ரகசியங்களையும் சாதுரியமாகக் கேட்டறியும் ஆற்றல் பெற்று,• அறிந்தவை = தான் அறிந்து கொண்ட செய்திகளில்,• ஐயப்பாடு இல்லதே ஒற்று = எவ்வித சந்தேகமும் குழப்பமும் இன்றித் தெளிவாகத் துணிய வல்லவனே சிறந்த ஒற்றன் ஆவான்.
மு.வரதராசன்
மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.
பரிமேலழகர்
மறைந்தவை கேட்க வற்று ஆகி - ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று - கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான். (மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து,அத்தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்கவேண்டுதலின், 'கேட்க வற்று ஆகி' என்றும் கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினை செய்யலாகாமையின் 'ஐயப்பாடு இல்லதே' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.
Meaning in English
A spy must search each hidden matter out, And full report must render, free from doubt





