Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 582

பொருட்பால்அரசியல்59. ஒற்றாடல்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில்.

ellArkkum ellAm nikazhpavai enjnjAnRumvallaRital vEntan tozhil

Sujatha Venkatraman

பொருள் / உரை

முருகா எளிய உரை

பகைவர், நண்பர், குடிமக்கள் என எல்லாரிடத்திலும் நிகழும் அனைத்துச் செய்திகளையும் நாள்தோறும் ஒற்றர்களைக் கொண்டு உடனுக்குடன் விரைந்து அறிந்து கொள்வதே ஆட்சியாளனின் தலையாய கடமையாகும்.

• எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் = எல்லாரிடமும் நிகழ்கின்ற அனைத்து நிகழ்வுகளையும்,• எஞ்ஞான்றும் = நாள்தோறும் ஒற்றர்களைக் கொண்டு,• வல்லறிதல் = விரைவாக அறிந்து கொள்வதே,• வேந்தன் தொழில் = ஆட்சியாளனுக்குரிய தலையாய கடமையாகும்.

மு.வரதராசன்

எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

பரிமேலழகர்

எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் - எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில். ('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

Meaning in English

Each day, of every subject every deed, 'Tis duty of the king to learn with speed

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout