Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 581

பொருட்பால்அரசியல்59. ஒற்றாடல்

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண்.

oRRum uraisAnRa nUlum ivaiyiraNTumteRRenka mannavan kaN

Hrudayesh R Krishnan

பொருள் / உரை

முருகா எளிய உரை

நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கூறும் ஒற்றரும், அறநெறியை உணர்த்தும் சிறந்த நீதிநூலும் ஆகிய இவ்விரண்டையுமே ஓர் ஆட்சியாளன் தன் இரு கண்களாகக் கொண்டு நாட்டை ஆள வேண்டும்.

• ஒற்றும் = உண்மை நிலவரங்களை அறியும் ஒற்றரும்,• உரைசான்ற நூலும் = சிறந்த நீதி நூல்களும் ஆகிய,• இவையிரண்டும் = இவ்விரண்டையுமே,• மன்னவன் கண் தெற்றென்க = தலைவன் தன் இரு கண்களாகத் தெளிவாகக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசன்

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

பரிமேலழகர்

ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க - அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக. (ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும்,இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

Meaning in English

These two: the code renowned and spies, In these let king confide as eyes

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout