மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்துகண் ணோடா தவர்.
maNNO Tiyainta marattanaiyar kaNNOTiyaintukaN NOTA tavar
Ponnarasu
பொருள் / உரை
முருகா எளிய உரை
கண்களைப் பெற்றிருந்தும் கூடப் பிறரிடம் பரிவும் இரக்கமும் காட்டும் 'கண்ணோட்டம்' இல்லாதவர்கள், மண்ணில் வேரூன்றி நிற்கும் உணர்ச்சியற்ற மரத்தைப் போன்றவர்களே ஆவார்கள்.
• கண்ணோடு இயைந்து = கண்களைப் பெற்றிருந்தும்,• கண்ணோடாதவர் = பிறரிடம் பரிவும் இரக்கமும் காட்டாதவர்கள்,• மண்ணோடு இயைந்த மரத்து அனையர் = மண்ணில் வேரூன்றி நிற்கும் உணர்ச்சியற்ற மரத்திற்கு இணையானவர்கள்.
மு.வரதராசன்
கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.
பரிமேலழகர்
கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர் - ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணோடு இயைந்த மரத்து அனையர் - இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர். ('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.)
சாலமன் பாப்பையா
கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.
Meaning in English
Whose eyes 'neath brow infixed diffuse no ray Of grace; like tree in earth infixed are they





