Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 570

பொருட்பால்அரசியல்57. வெருவந்தசெய்யாமை

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுஇல்லை நிலக்குப் பொறை.

kallArp piNikkung kaTungkOl atuvallatillai nilakkup poRai

Baalakrishna Veluswamy

பொருள் / உரை

முருகா எளிய உரை

மக்கள் அஞ்சி நடுங்கும் கொடுங்கோல் ஆட்சி புரியும் ஆட்சியாளன், நீதி நூல்களைக் கற்காத கொடிய அறிவிலிகளையே தனக்குத் துணையாகச் சேர்த்துக் கொள்வான்; அத்தகைய கொடுங்கோலர்களின் கூட்டத்தை விட இந்தப் பூமிக்குத் தாங்க முடியாத பெரும் பாரமான சுமை வேறு எதுவும் இல்லை.

• கடுங்கோல் = மக்கள் அஞ்சும் கொடுங்கோல் ஆட்சி புரியும் அரசன்,• கல்லார்ப் பிணிக்கும் = நீதி நூல்களைக் கற்காத அறிவிலிகளையே தனக்குத் துணையாகச் சேர்த்துக் கொள்வான்;• அது அல்லது = அக்கூட்டத்தைத் தவிர,• நிலக்குப் பொறை இல்லை = இந்த பூமித்தாய்க்குப் பெரும் பாரமான சுமை வேறு எதுவும் இல்லை.

மு.வரதராசன்

கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

பரிமேலழகர்

கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும் - கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும், அது அல்லது நிலக்குப் பொறை இல்லை - அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை. ('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறைஅது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்தசெய்தலின் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

Meaning in English

Tyrants with fools their counsels share: Earth can no heavier burthen bear

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout