செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும்.
seruvanta pOzhtiR siRaiseyyA vEntanveruvantu veytu keTum
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
போர் அல்லது நெருக்கடிகள் வருவதற்கு முன்னரே தற்காப்புக்கான பாதுகாப்பு அரண்களைச் செய்துகொள்ளாத ஆட்சியாளன், ஆபத்து வந்து தாக்கும் போது பயந்து நடுங்கி மிக விரைவிலேயே அழிந்து போவான்.
• சிறை செய்யா வேந்தன் = ஆபத்து வருவதற்கு முன்பே தற்காப்பு அரண்களை அமைத்துக் கொள்ளாத தலைவன்,• செருவந்த போழ்தில் = போர் வந்து தாக்கும் போது,• வெருவந்து = பாதுகாப்பு இல்லாததால் பயந்து நடுங்கி,• வெய்து கெடும் = மிக விரைவிலேயே அழிந்து போவான்.
மு.வரதராசன்
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
பரிமேலழகர்
சிறை செய்யா வேந்தன் - செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண்செய்து கொள்ளாத அரசன் செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும். (பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவி் அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.
Meaning in English
Who builds no fort whence he may foe defy, In time of war shall fear and swiftly die





