இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்சீறிற் சிறுகும் திரு.
inattARRi eNNAta vEntan sinattARRissIRiR siRukun tiru
K. A. Vasundaraa
பொருள் / உரை
முருகா எளிய உரை
அமைச்சர்களோடு கலந்து ஆலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு, காரியம் கெட்ட பின்னர் சினமடைந்து அவர்களைச் சீறி விழும் தலைவனின் செல்வமும் ஆட்சியும் நாளுக்கு நாள் தேய்ந்து அழியும்.
• இனத்தாற்றி எண்ணாத வேந்தன் = அமைச்சர்களோடு கலந்து ஆலோசித்துச் செயல்படாத தலைவன்,• சினத்தாற்றிச் சீறின் = காரியம் கெட்ட பிறகு கோபப்பட்டு அவர்களைச் சீறிச் சினந்தால்,• திருச் சிறுகும் = அவனது செல்வமும் அதிகாரமும் நாளுக்கு நாள் சுருங்கி அழியும்.
மு.வரதராசன்
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.
பரிமேலழகர்
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் - காரியத்தைப்பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன், சினத்து ஆற்றிச் சீறின் - அப்பிழைப்பால் தன் காரியம் தப்பியவழித்தன்னைச் சினமாகிய குற்றத்தின் கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின், திருச்சிறுகும் - அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும். (அரசர் பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின்பிழைப்பாதால் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர், நீங்கவே,அப்பிழைப்புத் தீருமாறும் அப்பாரம் இனிது உய்க்கு மாறும் இலனாம் என்பது நோக்கி, 'திருச் சிறுகும்' என்றும் கூறினார். இதனான் பகுதி அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் குற்றமும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.
Meaning in English
Who leaves the work to those around, and thinks of it no more; If he in wrathful mood reprove, his prosperous days are o'er





