Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 567

பொருட்பால்அரசியல்57. வெருவந்தசெய்யாமை

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம்.

kaTumozhiyung kaiyikanta taNTamum vEntanaTumuraN tEykkum aram

Varshan

பொருள் / உரை

முருகா எளிய உரை

கடுஞ்சொற்களும், குற்றத்தின் அளவைத் தாண்டி வரம்பு மீறி வழங்கப்படும் கொடுமையான தண்டனைகளும், ஓர் ஆட்சியாளனின் பகை வெல்லும் இரும்பு போன்ற பேராற்றலையும் வலிமையையும் நாளுக்கு நாள் தேய்த்து அழித்துவிடும் கூரிய அரம் போன்றவையாகும்.

• கடுமொழியும் = பேசும் கடுமையான சுடுசொற்களும்,• கையிகந்த தண்டமும் = வரம்பு மீறி வழங்கும் கொடுந்தண்டனைகளும்,• வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் = தலைவனின் இரும்பு போன்ற படை வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரம் போன்றதாகும்.

மு.வரதராசன்

கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

பரிமேலழகர்

கடுமொழியும் கையிகந்த தண்டமும் - கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும், வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் - அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம். (கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவைஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னா முகம் உடைமை,கண்ணோட்டம் இன்மை , கடுஞ்சொற்சொல்லல், கைஇகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதூஉம், இவைசெய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம்கூறப்பட்டன.

சாலமன் பாப்பையா

கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

Meaning in English

Harsh words and punishments severe beyond the right, Are file that wears away the monarch's conquering might

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout