அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து.
arunjsevvi innA mukattAn perunjselvampEeykaN Tanna tuTaittu
V. Chander
பொருள் / உரை
முருகா எளிய உரை
மக்களுக்கு எளிதில் காணக் கிடைக்காதவனாய், கண்டபோதும் கடுகடுத்த முகத்தோடு இருப்பவனின் பெரும் செல்வம், பேயால் அல்லது பூதத்தால் காக்கப்பட்டுத் தனக்கும் பிறருக்கும் பயன்படாமல் பாழாகும் செல்வத்திற்கு ஒப்பானதாகும்.
• அருஞ்செவ்வி = எளிய மக்கள் தன்னை எளிதில் காண முடியாதவனாய்,• இன்னா முகத்தான் = நேரில் கண்டாலும் கடுகடுத்த சின முகமுடையவனாய் இருப்பவனின்,• பெருஞ்செல்வம் = பெரும் செல்வமானது,• பேஎய் கண்டன்னது உடைத்து = பேயால் காக்கப்பட்டு யாருக்கும் பயன்படாமல் வீணாகும் தன்மையுடையதாகும்.
மு.வரதராசன்
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.
பரிமேலழகர்
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் - தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினையுடையானது பெரிய செல்வம், பேய் கண்டன்னது உடைத்து - பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து. (எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின, இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பது பற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.)
சாலமன் பாப்பையா
தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.
Meaning in English
Whom subjects scarce may see, of harsh forbidding countenance; His ample wealth shall waste, blasted by demon's glance





