கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர்.
kaTitOssi mella veRika neTitAkkamnIngkAmai vENTu pavar
Vanathi Suresh
பொருள் / உரை
முருகா எளிய உரை
தம் அதிகாரமும் நல்வாழ்வும் நெடுங்காலம் நிலைக்க விரும்பும் ஆட்சியாளர்கள், கண்டிக்கும் போது கடுமை காட்டி, தண்டனையை நிறைவேற்றும் போது வரம்பு மீறாமல் மென்மையோடு அளவாகத் தண்டிக்க வேண்டும்.
• ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர் = தம் ஆட்சியும் செல்வமும் நெடுங்காலம் நிலைக்க விரும்புபவர்கள்,• கடிது ஓச்சி = கண்டிக்கும் போது கடுமையாகத் தண்டிப்பது போல் தொடங்கி,• மெல்ல எறிக = தண்டனை தரும் போது வரம்பு மீறாமல் அளவோடு செய்ய வேண்டும்.
மு.வரதராசன்
ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.
பரிமேலழகர்
கடிது ஒச்சி - அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி, மெல்ல எறிக - செய்யுங்கால் அளவிறவாமல் செய்க, ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர் - ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார். (கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. இவை இரண்டு பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.
Meaning in English
For length of days with still increasing joys on Heav'n who call, Should raise the rod with brow severe, but let it gently fall





