தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண்.
taRkAttut taRkoNTAR pENit takaisAnRasoRkAttus sOrvilAL peN
Shan Selvaraj
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• தன் காத்து = தன் ஒழுக்க நெறியில் வழுவாமல் தன்னைப் பாதுகாத்து,• தன் கொண்டான் பேணி = தன் கணவனின் உடல் மற்றும் மன நலன்களை அன்போடு பேணிப் பராமரித்து,• தகை சான்ற சொல் காத்து = குடும்பத்திற்குரிய நற்புகழையும் நற்பெயரையும் களங்கமின்றிப் பாதுகாத்து,• சோர்வு இலாள் = இல்லறக் கடமைகளில் சோர்வடையாமல் விழிப்புடன் வாழ்பவளே• பெண் = சிறந்த பெண் ஆவாள்.எளிய விளக்கம்:தன் கற்பு நெறியைத் தவறாமல் காத்துக்கொண்டு, தன் கணவனையும் அன்போடு பேணி, குடும்பத்தின் நற்புகழைக் காப்பாற்றுவதில் சோர்வடையாமல் செயலாற்றுபவளே சிறந்த பெண் ஆவாள்.
மு.வரதராசன்
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
பரிமேலழகர்
தன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
Meaning in English
Who guards herself, for husband's comfort cares, her household's fame, In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name





