Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 555

பொருட்பால்அரசியல்56. கொடுங்கோன்மை

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை

allaRpaT TARRA tazhutakaN NIranREselvattait tEykkum paTai

Anushree

பொருள் / உரை

முருகா எளிய உரை

அநீதியான ஆட்சியால் துன்பப்பட்டு, அத்துயரத்தைத் தாங்க முடியாமல் குடிமக்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகளே, கொடுங்கோலனின் செல்வத்தையும் அதிகாரத்தையும் வேரறுத்து அழிக்கும் கூரிய படைக்கலமாகும்.

• அல்லற்பட்டு = கொடுங்கோல் ஆட்சியால் குடிமக்கள் பெரும் துன்பப்பட்டு,• ஆற்றாது = அத்துன்பத்தைத் தாங்க முடியாமல்,• அழுத கண்ணீர் அன்றே = அவர்கள் சிந்திய கண்ணீர்த் துளிகள்தான்,• செல்வத்தைத் தேய்க்கும் படை = கொடுங்கோலனின் செல்வத்தை அடியோடு தேய்த்து அழிக்கும் கூரிய ஆயுதமாகும்.

மு.வரதராசன்

(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.

பரிமேலழகர்

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை - அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி. (அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

Meaning in English

His people's tears of sorrow past endurance, are not they Sharp instruments to wear the monarch's wealth away

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout