இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின்.
iRaikAkkum vaiyakam ellAm avanaimuRaikAkkum muTTAs seyin
Thirukkural
பொருள் / உரை
முருகா எளிய உரை
நாட்டின் குடிமக்கள் அனைவரையும் தலைவன் பாதுகாப்பான்; நெருக்கடியான காலத்திலும் சிறிதும் வழுவாமல் நேர்மையான செங்கோல் ஆட்சி புரிந்தால், அந்தத் தலைவனை அவன் காத்த நீதியே அரணாக நின்று பாதுகாக்கும்.
• வையகம் எல்லாம் = உலகத்து மக்கள் அனைவரையும்,• இறை காக்கும் = நாட்டை ஆளும் தலைவன் பாதுகாப்பான்;• முட்டாச் செயின் = எத்தகைய சூழ்நிலையிலும் நீதி தவறாது ஆட்சி செய்தால்,• அவனை = அந்தத் தலைவனை,• முறை காக்கும் = அவன் காத்த அந்த நேர்மையான நீதியே எப்போதும் பாதுகாக்கும்.
மு.வரதராசன்
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
பரிமேலழகர்
வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின். (முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
Meaning in English
The king all the whole realm of earth protects; And justice guards the king who right respects





