குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு.
kuTitazhIik kOlOssu mAnila mannanaTitazhIi niRkum ulaku
S. Sreenithi
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• குடி தழீஇ = குடிமக்களை அன்போடு அரவணைத்து,• கோல் ஓச்சும் = நீதி வழுவாமல் நேர்மையான ஆட்சி புரியும்,• மாநில மன்னன் = பரந்த நிலத்தை ஆளும் தலைவனுடைய,• அடி தழீஇ = திருவடிகளைப் பற்றிக்கொண்டு,• உலகு நிற்கும் = உலகத்து மக்கள் அனைவரும் நீங்காத அன்போடு வாழ்வர்.எளிய விளக்கம்:தன் குடிமக்களைப் பாசத்தோடு அரவணைத்து, நீதி தவறாமல் நேர்மையான செங்கோல் ஆட்சி நடத்தும் தலைவனின் திருவடிகளைப் பற்றி, உலகத்து மக்கள் அனைவரும் நீங்காத பேரன்போடு போற்றி வாழ்வார்கள்.
மு.வரதராசன்
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
பரிமேலழகர்
குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை, தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார். (அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும் , அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
Meaning in English
Whose heart embraces subjects all, lord over mighty land Who rules, the world his feet embracing stands





