Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 543

பொருட்பால்அரசியல்55. செங்கோன்மை

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல்.

antaNar nURkum aRattiRkum AtiyAyninRatu mannavan kOl

Pavithra Radhakrishnan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சான்றோர்கள் அருளிய மெய்யறிவு நீதி நூல்களுக்கும், மக்கள் கடைப்பிடிக்கும் அறநெறிகளுக்கும் பாதுகாப்பான மூலாதாரமாய் நிலைபெற்றுத் துணை நிற்பது, ஆட்சியாளனின் நேர்மையான செங்கோல் நீதியேயாகும்.

• அந்தணர் நூற்கும் = அறவோர்களாகிய சான்றோர்களின் மெய்யறிவு நீதி நூல்களுக்கும்,• அறத்திற்கும் = உலகில் தழைத்தோங்கும் தர்ம ஒழுக்க நெறிகளுக்கும்,• ஆதியாய் நின்றது = அடிப்படையான மூலாதாரமாய் நிலைபெற்று விளங்குவது,• மன்னவன் கோல் = தலைவனின் நீதி தவறாத நேர்மையான செங்கோலாகும்.

மு.வரதராசன்

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

பரிமேலழகர்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல். (அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.

Meaning in English

Learning and virtue of the sages spring, From all-controlling sceptre of the king

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout